தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் அருகே வசித்து வரும் மாதேஸ்வரன் என்பவருக்கு வனிதா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றன. வனிதா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி கணவர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டார்.
அதன் பின் வனிதா தனியாக பேசிக் கொண்டிருந்ததால் அவரை தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து வனிதாவை மாதேஸ்வரன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மீண்டும் உறவினர்கள் தகராறு செய்ததால் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். சேலத்தில் உள்ள அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் வனிதா உயிரிழந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் அதை தெரிவிக்காமல் தவணை முறையில் பணம் பெற்று வந்துள்ளது அந்த தனியார் மருத்துவமனை.
இந்த விஷயம் தெரிந்த வனிதாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் குதித்தனர். இறந்த பின்னும் அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை நடத்தி வருவதாக உறவினர்கள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கினர்.
இதனை தொடர்ந்து, போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வனிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.