வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வரும் சீனா, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் அமைதி நிலவுகிறதாக மட்டும் கருத்து கூறியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் அமைந்துள்ள யாங்ஷ்டே பகுதியில் அத்துமீறி இந்திய பகுதிக்குள் வந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரு நாடுகளின் வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதன் பிறகு சீன வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.
இது தொடர்பாக பார்லிமென்டில் விளக்கம் அளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ” நமது பிராந்தியத்தை ஆக்கிரமிக்க முயன்ற சீன வீரர்களை நமது வீரர்கள் வீரத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை சீனாவிற்கே திருப்பி அனுப்பினர். இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்த சில ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. படுகாயமும் அடையவில்லை”. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின்னிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் அறிந்த வரை இரு நாட்டு எல்லையில் நிலைமையானது சீராக உள்ளது. எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் தூதரக மற்றும் ராணுவ ரீதியில் தொடர்பில் உள்ளது. நீங்கள் எழுப்பிய கேள்விக்கான பதிலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தான் கேட்க வேண்டும். இந்தியாவும், எங்களுடன் ஒரே பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு நாட்டு தலைவர்கள் இடையே ஏற்பட்ட முடிவுகளை இந்தியா சுமூகமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய வீரர்களுடனான மோதல் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement