கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஜமேஷா முபின்(28) என்பவர் பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கிய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 6 பேரின் பாதுகாப்பு கருதியும் அழைத்து வருவதில் நேரம் அதிகம் ஏற்படுவதால் கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 6 பேரையும் பூந்தமல்லி தேசிய பலாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு என்.ஐ.ஏ.அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள்.
6 பேருக்கும் இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று ஆறு பேரையும் கோவை சிறையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். இன்று காலை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறு பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டு வந்த ஆறு பேரையும் தற்போது நீதிபதி முன்பு நேரில் ஆஜர்ப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆறு பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
தற்போது ஆஜர்படுத்தப்பட்ட ஆறு பேரில் மூன்று பேருக்கும், ஏற்கனவே சிறையில் உள்ள இரண்டு பேரான முகமது அசாரூதீன், பைரோஸ், அப்சர் கான், உமர் பரூக், பைரோஸ்கான் என 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு அளித்திருந்தனர்.
5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீதான விசாரணை நாளை நடத்தப்படும் என நீதிபதி இளவழகன் தெரிவித்ததையடுத்து ஆறு பேரையும் புழல் சிறைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.