சம்பளம் மற்றும் ஓய்வூதிய சம்பளத்திற்காக செலவிடப்படும் தொகை பாரியது என்பதினால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் செலவை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 2023 ஆம் ஆண்டில் எந்தவித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்வதற்கோ அல்லது மேலதிக கொடுப்பனவை செலுத்துவதற்கோ நிதியை ஒதுக்கீடு செய்யாதிருப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக வெகுஜன ஊடக ,பெருந்தெருக்கள் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திந்தக்க கருணாரத்ன கலந்துக்கொண்டார்.
இந்த ஊடக சந்திப்பில் தபால் திணைக்களம் தனியார் மயப்படுத்தப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில், 1982 ஆம் ஆண்டு தொடக்கம் நட்டத்தில் செயல்பட்டு வரும் தபால் சேவையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அரசாங்கம் நிதியை வழங்கி வருகிறது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைவாக பொது மக்கள் மீது தேவையற்ற வரி சுமையை சுமத்தாது இருப்பது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றுடன் மேலதிக கொடுப்பனவை செலுத்துவதன் மூலம் பொது மக்கள் பாரிய வரி சுமையை சுமக்க வேண்டியுள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்திய பின்னர், அரசாங்கம் கடனுக்காக வட்டியை செலுத்திய பின்னர் நாட்டின் மொத்த வருமானம் முழுமையாக இல்லாது போகின்றது. இந்நிலையில் எஞ்சிய பணிகளுக்காக எந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும் கடனை பெற்று இவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஆகக்கூடுதலான கடனை பெற்றுக்கொண்டுள்ளதினால் தொடர்ந்தும் கடனை பெறுவதில் வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்காக 1002 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தபால் திணைக்கள ஊழியர்களின் கோரிக்கை நியாயமற்றது. 2012 ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவிற்காக 7.4 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தபால் திணைக்களத்தின் மூலமான வருமானம் 4 பில்லியன் ரூபாவாகும். வருமானத்தை போன்று 148 வீதம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ள தொகை 11.7 பில்லியன் ரூபா. வருமானம் 7 பில்லியன் ரூபாவாகும். 2021 ஆம் ஆண்டில் சம்பளம் மேலதிக கொடுப்பனவிற்காக செலுத்தப்பட்ட தொகை 12.8 பில்லியன் ரூபாவாகும். ஆனால் தபால் திணைக்களத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் 7.1 பில்லியன் ரூபாவாகும்.
இதனை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமா? இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்து திணைக்களத்தை முன்னெடுக்க முடியுமா என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களினால் ஏற்றுக்கொள்ள முடியாத வரி சுமையின் காரணமாகவே விருப்பமின்றியே தபால் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.