
வரும் 5 நாட்களை பொறுத்தவரை தமிழகத்தில் எந்தவிதமான வானிலை முக்கிய நிகழ்வுகளும் இல்லை. வடக்கு கடலோரத்தில் இன்று சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழக கடற்பகுதிகளை கடந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல மாவட்டங்களில் கன மழையும், பலத்த காற்றும் வீசி, பல வகையிலும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாண்டஸ் புயல் கொண்டு வந்த மேகக் கூட்டங்கள் தமிழக வடக்கு கடலோரம் மற்றும் உள்மாவட்டங்களில் கீழடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது.

இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. சென்னையில் நேற்று முழுவதும் வெயில் தலை காட்டாமல், மேகங்கள் மூடி ஓரளவு இருளாகக் காணப்பட்டது; அவ்வப்போது விட்டு விட்டு, மழை பெய்தது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் கரையைக் கடந்து, வேலூர் மாவட்டம் வரை சென்று, கர்நாடக பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக வலுவிழந்தது. இந்த சுழற்சியானது மேற்கில் நகர்ந்து அரபிக் கடலுக்குள் சென்றுள்ளது.

இந்நிலையில், வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: “மாண்டஸ் புயலில் மிஞ்சிய சுழற்சியால் அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த பகுதி, அரபிக்கடலில் இந்திய பகுதியில் இருந்து விலகி ஏமனை நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது.
வரும் ஐந்து நாட்களை பொறுத்தவரை, தமிழகத்தில் எந்தவிதமான வானிலை முக்கிய நிகழ்வுகளும் இல்லை. வடக்கு கடலோரத்தில் இன்று சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

வடகிழக்கு பருவமழைக்கான காலத்தில், அக்டோபர் 1 முதல் நேற்று (12-ம் தேதி) வரை தமிழகம், புதுச்சேரியில் இயல்பு அளவான, 40 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இயல்பு அளவான 74 செ.மீட்டரை விட 16 சதவீதம் அதிகமாக, 86 செ.மீ. மழை பெய்துள்ளது” என்று கூறினார்.