புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதாவை கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா எத்தனால், ஹைட்ரஜன், பயோமாஸ் உள்ளிட்ட புதைபடிவமற்ற எரிபொருட்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க கொண்டு வரப்பட்டதாகும். இந்த மசோதா நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த மசோதாவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் சுட்டிக் காட்டினர்.
திமுக எம்பி வில்சன் பேசுகையில், ‘‘இந்த மசோதா சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் அதிகாரத்தை பறிக்கிறது. பல சட்ட சிக்கல்களை கொண்டிருப்பதால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்’’ என்றார். இதே போல எம்பிக்களும் மசோதாவை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.