தஞ்சாவூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 200 விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 200 விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, இவற்றில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் உள்ள கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி சீட்டை, விண்ணப்பித்த இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.