விவசாயி கொடூர கொலை: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

தலை, கை, கால்களை வெட்டி விவசாயி கொடூரமாக கொலை

திருப்பத்துார் : விவசாயியை தலை, கை மற்றும் காலை துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்தவர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில், தலை, கை, கால், துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கிடந்த ஆண் உடல் கிடந்ததை, நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர், வெள்ளகுட்டையைச் சேர்ந்த விவசாயி சோழன், 56, என்பது தெரிந்தது. நேற்று காலை அவர் தன் நிலத்திற்கு நடந்து சென்றபோது கொலை நிகழ்ந்துள்ளது.

அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின், அவரது தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டி, அதே பகுதியில் வீசிச் சென்றுள்ளனர்.

சோழனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், ஏற்கனவே நிலத்தகராறு இருந்தது. இதனால், கூலிப்படையினரை கொண்டு, இக்கொலை நடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வாணியம்பாடி டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் தலைமையில், தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கடலாடியில் நர்சை மிரட்டிய போலீஸ்

கடலாடி: ஆள் மாறாட்டத்தால் நள்ளிரவில் நர்ஸ் வீட்டில் மிரட்டல் விடுத்த போலீசார் குறித்து புகார் செய்யப்பட்டது.

கடலாடி நாடார் தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 50. இவர் கமுதி தாலுகா மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமூர்த்தி 29, பார்த்தசாரதி 27, என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

சமீபத்தில் இவரது வீட்டிற்கு இரவு 11:30 மணிக்கு வந்த கடலாடி போலீசார் கதவைத் தட்டி எங்கே உனது மகன் பார்த்தசாரதி என கேட்டு விசாரித்தனர். அதற்கு பஞ்சவர்ணம் எனது மகன் திருச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கிறான் என்று கூறினார். அதற்கு கடலாடி போலீசார் தகாத வார்த்தை பேசி மிரட்டும் தொணியில் பேசியதாக பஞ்சவர்ணம் புகார் தெரிவித்தார்.

பஞ்சவர்ணம் கூறுகையில், கஞ்சா விற்பனை செய்யும், உனது மகனை எங்களிடம் ஒப்படை. இல்லாவிட்டால் மாவு கட்டு போட்டு விடுவோம் என்று கூறி என்னையும், நிறைமாத கர்ப்பிணியான மருமகளுக்கும் மனதளவில் மிரட்டல் விட்டனர். இதனால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தோம்.

மறுநாள் காலை கணவருடன் கடலாடி போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். அப்போது அங்கிருந்த போலீசார் பார்த்தசாரதி என்ற பெயர் கொண்ட வேறு நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். தெரியாமல் உங்கள் வீட்டுக்கு வந்து விட்டோம் என்று அலட்சியமாக பதில் கூறினர்.

இந்த செயலால் நாங்கள் மனதளவில் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே போலீசார் இது போன்ற கவனக்குறைவான சம்பவங்களுக்கு இடம் கொடுக்காமல் நடக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.

3,000 கிலோ கடத்தல் தங்கம் அமலாக்கத் துறை பறிமுதல்

புதுடில்லி: ‘இந்த ஆண்டு நவம்பர் வரையில், அமலாக்கத்துறையினரால் 3,083 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது; இதில் அதிகமான தங்கம் கேரளாவில் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

நம் நாட்டிற்குள், விமானம் வாயிலாக அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு நவம்பர் வரை 3,083 கிலோ தங்கம் அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3,588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் கேரளாவில் மட்டும் 690 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 474 கிலோ; தமிழத்தில் 440 கிலோ; மேற்கு வங்கத்தில் 369 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நிதித்துறை இணை அமைச்சர்பங்கஜ் சவுத்ரி நேற்று லோக்சபாவில் கூறியதாவது:

தங்க கடத்தலைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி, மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணியரின் விபரங்கள், சரக்கு கையாளும் பிரிவு ஆகியவற்றிலும் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் கையாளும் புதுப்புது யுக்திகளை பற்றி சுற்றறிக்கைகளும் அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நகை பறித்தவர் கைது

திருப்பூர்: திருப்பூர், பெரியபுத்துாரை சேர்ந்தவர் தெய்வாத்தாள், 65. கடந்த, 30ம் தேதி, கணவர் கோவிந்தசாமி உடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வசந்தம் நகர் அருகே, பின் தொடர்ந்து, டூவீலரில் வந்த நபர்கள் தெய்வாத்தாள் அணிந்திருந்த, 3.5 சவரன் நகையை பறித்து தப்பி சென்றனர்.

கீழே விழுந்த தெய்வாத்தாள் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மங்கலம் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, சிவகங்கை, அம்மாபட்டியை சேர்ந்த கல்யாணசுந்தரம், 23 என்பவரை கைது செய்து, நகையை மீட்டனர்.

கஞ்சா விற்பனை 5 பேருக்கு ‘காப்பு’

ராஜமங்கலம்: கொளத்துார், கண்ணகி நகர் 200 அடி சாலை சந்திப்பில், ராஜமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

latest tamil news

அப்போது, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட, வில்லிவாக்கம், ராஜாஜி நகர், முரளி தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 23, கொளத்துார், வரலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணா, 21, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சார்லஸ், 19, அம்பத்துார், சக்தி நகரைச் சேர்ந்த லோகேஷ், 19, ஆகியோர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று, மாதவரம் மதுவிலக்கு போலீசார், மாதவரம், 200 அடி சாலை, சின்ன ரவுண்டானா அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாதவரம் அடுத்த சின்னசேக்காடு, சின்னக்கண்ணு தெருவை சேர்ந்த சதீஷ்குமாரை, 30, என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அவர் ஓட்டி வந்த, ‘ஹோண்டா ஆக்டிவா’ ரக இரு சக்கர வாகன பெட்டியில், 1.1 கிலோ கஞ்சா சிக்கியது. பழைய குற்றவாளியான அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்கு

வியாசர்பாடி: வியாசர்பாடி, பி.வி.காலனி 1வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 20. இவர், மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன், முன்விரோதம் காரணமாக தினேஷின் தம்பி கரணை மர்ம நபர்கள் அடித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று வியாசர்பாடி, பி.வி.காலனி, 10வது தெருவில் நின்ற மர்ம கும்பலிடம், ‘என் தம்பி கரணை ஏன் அடித்தீர்கள்…’ எனக் கேட்டு, தினேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மர்ம கும்பல் தினேஷை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் தினேஷ் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு ‘குண்டாஸ்’

விழுப்புரம், : கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

latest tamil news

விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36; அதே பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 20; இருவரும் கடந்த நவம்பர் 6ம் தேதி இரவு முன்விரோதம் காரணமாக பெருமாள் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கல் மற்றும் கட்டையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன், கணபதியை கைது செய்தனர்.

இவர்களின் தொடர் நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில், வெங்கடேசன், கணபதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.