112 பைகளில் 1 ரூபாய் நாணயங்கள்… KTM பைக் வாங்க இளைஞர் செய்த நூதன முயற்சி!

சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பொருளை வாங்கினால், அதற்காக நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் தருணங்கள் ஏராளம். ஒவ்வொரு தடவையும், `இது என்னோட பணத்துல வாங்குனது… ஒரு ஒரு ரூபாயா நானே எனக்காக சேமிச்சு வாங்குனேன்’ என்று சொல்லிக்கொண்டே இருப்போம். இதை உண்மையாக்கும் வகையில், நிஜமாகவே ஒரு ஒரு ரூபாயாக சேமித்துவைத்து, இறுதியில் தான் ஆசைப்பட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கியிருக்கிறர் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரொருவர்.
வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர், பாலிடெக் மாணவராம். தெலங்கானாவின் ராமகிருஷ்ணாபூர் என்ற பகுதியில் தாரகராம காலனியில் வசித்து வரும் இவருக்கு, சொந்தமாக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது. அதற்காக விசித்திரமாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார் வெங்கடேஷ். அப்படி அவர் செய்த விசித்திர செயல்தான், பைக் வாங்க ஒரு ரூபாய் நாணயங்களை சேர்க்க தொடங்கியது. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, சுமார் 112 பைகளில் தனக்கு வேண்டிய அளவு தொகையை அவர் சேர்த்திருக்கிறார்.
image
தேவையான பணம் சேர்ந்ததும், பைக் ஷோரூம் ஊழியர்களை அனுகியுள்ளார். அவர்களிடம் தனது பைக் ஆசையையும், ஒரு ரூபாய் நாணயங்கள் மூட்டை பற்றியும் சொல்லியிருக்கிறார் வெங்கடேஷ். தொடக்கத்தில் இவ்வளவு நாணயங்களை பெற ஷோ ரூம் ஊழியர்கள் தயக்கம் காட்டியபோதும், வெங்கடேஷ் அவர்களை சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். பின் ஒருநாள் தான் சேமித்த மொத்த பணத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து அள்ளிப்போட்டு ஷோ ரூம்-க்கு கொண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட அரை நாள் அந்த நாணயங்களை எண்ணியுள்ளனர் ஷோ ரூம் ஊழியர்கள். 
மொத்தம் ரூ.2.5 லட்சம் தொகை அந்த சேமிப்பில் இருந்திருக்கிறது. அதை வைத்து தான் ஆசைப்பட்ட பைக்கை இறுதியில் வாங்கியிருக்கிறார் வெங்கடேஷ்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.