சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் நிதித்துறை செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் மீரட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக 136 கட்டணமில்லா சேனல்களும், 82 கட்டணத்துடன் கூடிய சேனல்களும், ஆக மொத்தம் 218 சேனல்களை 140 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ஒளிபரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இது போன்ற இடர்பாடுகள் இல்லாமல் உயர் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்து அவசரசித்து அதற்கான தீர்வு கண்டு ஒளிபரப்பு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேனல்களை வழங்குவது குறித்தும், அதேபோன்று புதிய தொழில்நுட்பங்களான வி.ஓ.டி, ஓ.டி.டி, ஐ.பிடிவி வழங்கக்கூடிய ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு முறை செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்குவது குறித்தும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஓ.டி.டி செயலி உருவாக்குவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓ.டி.டி தொடர்பான செயல்பாடுகள் அடுத்த ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் 6 மாதத்திற்குள் தமிழக அரசு சார்பில் ஓ.டி.டி செயலி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.