காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீன அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தங்கும் ‘காபூல் லாங்கன்’ என்ற ஓட்டல் உள்ளது இந்த ஓட்டலில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் அரசுப் படையால் கொல்லப்பட்டதாகவும் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக பால்கனியில் இருந்து குதித்த 2 வெளிநாட்டவர் காயம் அடைந்ததாகவும் தலிபான் அரசு கூறியது. இந்த தாக்குதலால் கடும் அதிர்ச்சி அடைந்ததாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று பெய்ஜிங்கில் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார். “இதுகுறித்து ஆப்கன் அரசிடம் அங்குள்ள சீன தூதரக அதிகாரிகள் தீவிரமாக எடுத்துரைத்தனர். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஆப்கன் அரசுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்குஐஎஸ்ஐஎஸ் கிளை அமைப்பானஐஎஸ்-கோரசான் பொறுப்பேற்றுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆப்கனில் தலிபான் அரசுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன் இம்மாத தொடக்கத்தில் ஆப்கனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பரில் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தூதரக மூத்த அதிகாரி, பாதுகாவலர் ஒருவர் உட்பட பலர் உயிரிழந்தனர்.
ஆப்கனில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஒன்றாக ஐஎஸ்-கோரசான் உள்ளது. ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே அங்கு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய சித்தாந்தத்தை இன்னும் கடுமையாக செயல்படுத்துவது மற்றும் அந்தப் பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த அமைப்பு போரிட்டு வருகிறது.