அருணாச்சலப் பிரதேசத்தின், தவாங் எல்லைப் பகுதியில் டிசம்பர் 9-ம் தேதியன்று சீன ராணுவப் படை அத்துமீறி நுழைந்ததாக, இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே தாக்குதல் நடைபெற்றது. இது நாடளவில் பெரும் பேசுபொருளானது. இது குறித்து உரிய பதில் அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.

அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் சீனாவின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது” என மக்களவையில் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அது குறித்து கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், “சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நாம் நிறுத்தக் கூடாது… சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் சீனா பாடம் கற்றுக்கொள்வதுடன், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்” எனக் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, இந்தியா – சீனா மோதல் தொடர்பாக விவாதம் நடத்தப்படவில்லையென நாடாளுமன்றத்தில் 17 எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.