காங்கிரஸ் கடும் தாக்கு இந்தியா-சீனா எல்லை மோதலில் அரசு உண்மையை மறைக்கிறது

புதுடெல்லி: இந்தியா, சீனா எல்லை மோதல் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கம் முழுமையற்றது எனவும், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு நாட்டிடம் இருந்து உண்மையை மறைப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்தியா, சீனா எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக, காங்கிரசின் செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் மக்களவை துணைத்தலைவருமான கவுரவ் கோகாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
டிசம்பர் 9ம் தேதி மோதல் சம்பவம் நடந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வளவு தாமதமாக அறிக்கை அளித்தது ஏன்? நேற்றே (நேற்று முன்தினம்) அவர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கலாமே? ஒன்றிய பாஜ அரசு தேசத்திடமிருந்து உண்மையை மறைக்கப் பார்க்கிறது. இந்த விஷயத்தில் உண்மையை சொல்லுங்கள் என்றுதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். தேச பாதுகாப்பில் எங்களுக்கு அக்கறை இருப்பதால்தான் அரசிடம் கேள்விகளை கேட்கிறோம்.

இந்த விஷயத்தில் ராஜ்நாத் சிங் அதிக தகவல்களை வழங்க நினைக்கலாம். ஆனால்  அவரது குரல், பிரதமர் மோடியால் அடக்கப்படுகிறது. அதனால்தான் ராஜ்நாத் சிங்கின் விளக்கம் முழுமையற்றதாக இருந்தது. தேச பாதுகாப்பு பிரச்னை வரும்போதெல்லாம் பிரதமர் மோடி, அமைச்சர்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறார். நாடாளுமன்றத்தை இருளிலேயே வைத்திருக்கிறீர்கள் ஏன்? நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க பாஜ அரசால் முடியவில்லை. அவர்களுக்கு தேர்தலும் மதவாத அரசியலைப் பற்றி நினைக்கத்தான் நேரம் இருக்கிறதே தவிர, நாட்டை பற்றி சிந்திக்க நேரமில்லை.

இந்த அரசின் வெளியுறவு கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்த காரணத்தினால்தான் சீன எல்லையில் இதுபோன்ற மோதல்கள் நடக்கின்றன. மோடி அவர்களே பயப்படாதீர்கள். தைரியமாக சீனாவின் பெயரை சொல்லுங்கள். மேலும், இந்த சவாலை இந்தியா எவ்வாறு வலுவுடன் எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரியப்படுத்துங்கள். உங்கள் பலவீனத்தை சீனா அறிந்து கொள்ள விட்டுவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் ராஜதந்திரத்தில் தோல்வி ஏற்பட்டது. சீன அரசை எதிர்த்து போரிடுமாறு நாங்கள் அரசிடம் கூறினால், நீங்கள் எங்களுடன் சண்டையிடுகிறீர்கள். இது உங்கள் ராஜதந்திரத்தின் தோல்வியை காட்டுகிறது. பிரதமர் மோடி தனது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். ராஜிவ்காந்தி அறக்கட்டளை பதிவு ரத்து போன்ற விவகாரங்களை கூறி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பாமல், உண்மையை சொல்ல வேண்டும். இதற்கு நாம் ஒற்றுமையாக பதிலளிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.