கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியப் பிரபலங்கள் – தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள்தான் டாப்!

2022-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த பிரபலங்களில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் யார், யார் எந்த இடம் பிடித்துள்ளனர் எனப் பார்க்கலாம்.

ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தற்போது வரை அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த 100 பிரபலங்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த பிரபலங்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் கொரியாவின் BTS எனும் பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பாடகரான ‘வி’ முதலிடத்திலும், அதே இசைக்குழுவைச் சேர்ந்த ஜங்க்கூக் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கோலிவுட்டை பொறுத்தவரை தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விஜய் 15-வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்துத்தான் மற்ற நடிகர்கள் உள்ளனர். சூர்யா 45-வது இடத்திலும், தனுஷ் 46-வது இடத்திலும் உள்ளனர். ரஜினிகாந்த் 68-வது இடத்திலும், அஜித்குமார் 78-வது இடத்திலும் உள்ளனர்.

image

முன்னதாக ஜூன் மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் விஜய் 22-வது இடத்திலும், தனுஷ் 61-வது இடத்திலும், சூர்யா 63-வது இடத்திலும், ரஜினிகாந்த் 77-வது இடத்திலும் இருந்தனர். இந்த 100 பேர் பட்டியலில் கமல்ஹாசன், அஜித் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும் நடிகர்களை காட்டிலும் நடிகைகளே அதிகம் இடங்களை கைப்பற்றியிருந்தனர்.

கடந்த வருடம், அதாவது 2021-ம் ஆண்டில் வெளியான இந்தப் பட்டியலில் நடிகர் விஜய் 19-வது இடத்தில் இருந்தநிலையில், தற்போது இந்தாண்டு 4 இடங்கள் முன்னேறி 15-வது இடத்துக்கு வந்துள்ளார். அதேபோல் கடந்த வருடம் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், ரஜினிகாந்த் மற்றும் அஜித் இடம்பெற்றிருக்கவில்லை.

image

மேலும், நடிகைகளில் காஜல் அகர்வால் 13-வது இடத்திலும், சமந்தா 17-வது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 22-வது இடத்திலும், தமன்னா 31-வது இடத்திலும், நயன்தாரா 33-வது இடத்திலும் உள்ளனர். தென்னிந்தியாவிலேயே காஜல் அகர்வால் மற்றும் விஜய் தான் டாப்பில் உள்ளனர்.

இதேபோல் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி 3-வது இடத்திலும், தோனி 24- வது இடத்திலும், ரோகித் சர்மா 32-வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 51-வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா 58-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 67-வது இடத்திலும், கே.எல். ராகுல் 71-வது இடத்திலும், பாபர் அசாம் 81-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.