தருமபுரி மாவட்டம், புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55) விவசாயி. இவரின் மனைவி கந்தம்மாள் (45). இவர்களுக்கு பிரவீன்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என இரு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், இருவரும் சில வாரங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கந்தம்மாள் மகன்களுடன் வீட்டிலும், கிருஷ்ணன் வயலிலும் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், கிருஷ்ணன் வயலுக்கு அருகே, வெட்டுக் காயங்களுடன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, மதிகோன்பாளையம் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு தலைமையிலான போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், தந்தை வேறொரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததால் கோபமடைந்த மகன்கள் இருவரும், தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று இரவு சகோதரர்கள் பிரவீன்குமார், ரஞ்சித்குமாரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இறந்த விவசாயி கிருஷ்ணனின் மூத்த மகனான பிரேம்குமார் எம்.எஸ்.சி (கணிதம்) படித்துவிட்டு தனியார் கல்லுாரியில் அட்மினாகவும், இளைய மகன் ரஞ்சித்குமார் எம்.எஸ்.சி (அக்ரி) படித்துவிட்டு அக்ரோ சர்வீஸ் கம்பெனியிலும் பணியாற்றி வந்தனர்.
கொலையில் முடிந்த கோபம்!
சகோதரர்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலம் குறித்து, இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானுவிடம் போனில் பேசினோம். ‘‘சம்பவம் குறித்து நாங்க விசாரிக்கிறப்போ, ‘அப்பா தெனம் குடிச்சுட்டு வந்து அம்மாவ அடிக்கறாரு, தகராறு செய்றாறு. இதனால அம்மாக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்ல, போன வாரம்கூட ஒடம்பு முடியாம போயிடுச்சு. ஆனா, அப்பா குடும்பத்த கவனிக்கறது இல்ல, ஜாலியா சுத்திட்டு இருக்காரு, எத்தன நாள்தான் இந்தப் பிரச்னைய பார்த்துட்டு இருக்கறது, அதான் கோபத்துல பண்ணிட்டோம்’ எனச்சொல்லி வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. ரெண்டு பேரும் படிச்சவங்க, கோபத்துல வாழ்க்கைய தொலைச்சுட்டாங்க’’ என்றார்.