
திரைப்பட விழாவில் ஹாரர் படம் பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்
கேரளாவில் தற்போது கேரள சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த படங்களும் பங்கேற்று திரையிடப்பட்டு வருகின்றன. இந்தோனேசிய மொழியில் எடுக்கப்பட்ட சாத்தான் ஸ்லேவ்ஸ் (சாத்தானின் அடிமைகள்) என்கிற திரைப்படம் நேற்று இரவு திரையிடப்பட்டது. ஒரே ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது என்பதால் இந்த காட்சியை பார்ப்பதற்கு கூட்டம் அதிகப்படியாக சேர்ந்தது.
படம் திரையிடப்பட்ட சிறிது நேரத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் ஹாரர் படம் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாரா அல்லது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த நிகழ்வு நடந்ததா என்பது பற்றி இன்னும் தெளிவான விவரம் வெளியாகவில்லை.