தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீலகிரி மலை ரயில் பாதை குறுக்கே மரங்களும், மண் சரிவுகளும், பாறங்கற்களும் விழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.14) மேட்டுப்பாளையம் – குன்னூர் – ஊட்டி இடையே செல்லும் மலை ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.