நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் சம்பளம் வங்கி மூலமே வழங்கப்படுவதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிகளுக்கான பொறுப்பாளர் 90 நாட்களையும் கடந்து, கடந்த 7 மாதமாக பணியில் தொடர்கிறார். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், தனிநபர் விவசாய நிலத்தில் வேலை பார்க்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களின் ஆதார் விவரங்கள், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது பணிக்குரிய சம்பளம் வங்கி மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. நேரடியாக வழங்குவதில்லை. பணிகளை முறையாக மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘தனியார் நிலத்தில் வேலை செய்தது தொடர்பாக புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலைத் திட்ட பணிகள் முறையாக நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை செயலர் தரப்பில், அறிக்கையளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 4க்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.