திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. நேற்று முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை 85 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தற்போது ஒரு நிமிடத்தில் 65 முதல் 70 பக்தர்கள் 18ம்படி ஏறுகின்றனர். இதை 75 முதல் 80 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த 100 பேர் 18ம் படியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் கோயில் வருமானமும் அதிகரித்து இருக்கிறது. இந்த மண்டல காலத்தில் நடை திறந்த 25 நாட்களில் கோயிலின் மொத்த வருமானம் ரூ.150 கோடியை தாண்டி உள்ளது. இதில் அப்பம், அரவணை பாயசம் விற்பனை மூலம் மட்டும் ரூ.70 கோடி கிடைத்து உள்ளது. இதுவரை 70 லட்சம் டின் அரவணையும், 12.5 லட்சம் பாக்கெட்டுகள் அப்பமும் விற்பனையாகி உள்ளது.
