பெற்றோர் வர தாமதம் – சாலையில் தனியாக காத்திருந்த மாணவியை வீட்டிற்கே அழைத்துச்சென்ற எஸ்.பி

பெற்றோர் அழைத்துச்செல்ல வர தாமதமானதால் தனியாக ரோட்டில் நின்றிருந்த மாணவியை, தனது காரில் அழைத்துச்சென்று வீட்டில் விட்டுள்ளார் வேலூர் எஸ்.பி.
வேலூர் பாகாயம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்தும், மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்பது குறித்தும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் இன்று (14.12.2022) மாலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஓட்டேரி ஏரி அருகேயுள்ள சாலை சந்திப்பு பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த  எஸ்.பி ராஜேஷ் கண்ணண் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த மாணவி தனது பெயரையும், தான் வேலப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டுக்கு அழைத்துச்செல்ல யாரும் வராததால் அங்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
image
இதைக்கேட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன், மாணவியை தனது காரில் அமரவைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குளவிமேட்டில் உள்ள அந்த மாணவியின் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவரது பெற்றோரை வரவழைத்து மாணவியை இறக்கிவிட்டுள்ளார். வீட்டில் வேலை இருந்ததால் மாணவியை அழைக்க தாமதமானதாக பெற்றோர் கூறியுள்ளனர். தொடர்ந்து மாணவிகளை இதுபோன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினார். அப்போது மாணவி மற்றும் பெற்றோர் எஸ்.பி ராஜேஷ்கண்ணனுக்கு தனது நன்றியை தெரிவித்தனர்.
image
அதைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமக்களிடம் இங்கு காவல்துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா? மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். தனியாக தவித்த பள்ளி மாணவியை எஸ்.பி பாதுகாப்பாக காரில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.