புதுடெல்லி: நாட்டின் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்துள்ள நிலையில், மேலும் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25 லட்சம் கோடியை செலவிட அரசுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் இதன் மீதான விவாதத்திற்கு மக்களவையில் பதிலளித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசியதாவது: சில்லறை பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. சாமானிய மக்களுக்காக இதை இன்னும் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
குறைந்த பணவீக்கம் கொண்ட, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதால் தேக்க நிலை குறித்த கவலை தேவையில்லை. நிதிப் பற்றாக்குறையை பொறுத்த வரையில், நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம். கடந்த மார்ச் இறுதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, வராக்கடனை 7.28 சதவீதமாக குறைத்துள்ளோம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியை மற்ற நாட்டு கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். அதே சமயம் பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து துணை மானியக் கோரிக்கை மக்களவையில் நிறை்வேற்றப்பட்டது.