நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பாகமும், அதனை ஒட்டி அமைந்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகமும் தமிழகம் – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் கூடலுர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம், கேரளாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் நேற்றிரவு கேரளாவில் இருந்து கூடலுர் வழியாக மைசூர் நோக்கி சென்ற கோவையை சேர்ந்த லாரி சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த பந்திப்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரியை மடக்கிப்பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து உயிரிழந்த பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். லாரி மோதி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.