யூடியூப் வாசன் மீது வழக்கு பதிவு: கடலூரில் போலீசார் தடியடி

கடலூர்: கடலூர் புதுப்பாளையத்தில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததால் யூடியூப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் மகன் விக்னேஷ் (34). இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதே போல கடலூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செந்தில்(32). திரைப்பட இயக்குநர். இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் ஒரு பகுதியில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்று, கடலூர் பாரதி சாலையில் பேனர்கள் வைத்துள்ளனர்.

இதைப் பார்த்த போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறி, விக்னேஷ் மற்றும் செந்திலை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். நேற்று நடந்த அலுவலக திறப்பு விழாவுக்கு, டிடிஎப் வாசன் கடலூர் வந்தார். அப்போது அவரை பார்க்க நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பைக்குகளில் கடலூர் புதுப்பாளையத்தில் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், பயனில்லாததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் புதுப்பாளையம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி கூட்டம் சேர்த்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக டிடிஎப் வாசன், செந்தில், விக்னேஷ் உள்ளிட்ட 300 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும், ஒரே பைக்கில் 3 பேரை ஏற்றிக்கொண்டு வந்ததாக கூறி 20 பைக்குகளுக்கு ரூ.35  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.