சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.15) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது படிப்படியாக மேற்கு திசையில் இலங்கைகடற்பகுதியை நோக்கி நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 15, 16, 17, 18-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
14-ம் தேதி காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 செமீ, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 16 செமீ,அரியலூர் மாவட்டம் திருமானூரில் 15 செமீ, நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், ஆதார் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.