வாரிசு என்ற வசை கழியுங்கள் – அமைச்சர் உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவும், முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென அவரது உற்ற நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்துவைத்தார். நண்பர் என்ற முறையில் அன்பில் அவ்வாறு பேசினார் என பலர் கூறினர். இதனையடுத்து திமுகவின் சூப்பர் சீனியரான ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்திலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது திமுகவின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது.

ஆனால் ஏற்கனவே வாரிசு அரசியல் என்று பெயர் எடுத்திருக்கும் திமுக; உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் அந்த வாரிசு அரசியல் பட்டம் வலுப்பெறக்கூடும் என ஸ்டாலின் உதயநிதிக்கான அமைச்சர பட்டாபிஷேகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒருகட்டத்தில் திமுகவின் அடுத்த எதிர்காலம் உதயநிதிதான் என்பது உறுதியாகிவிட்டதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் முதலமைச்சர்.

இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது.

இதில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதிக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் கவிஞரும், திமுக ஆதரவாளருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்

இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்

தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக

அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.