தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த வாலிபர் பி.எஸ்.சி. படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவு வந்தது.
அந்த பதிவில், பெண் பெயரில் ஒருவர் அந்த வாலிபருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, “நான் பெங்களூர் விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறேன். பணம் கொடுத்து தான் நான் அந்த வேலையில் சேர்ந்தேன் . உங்களுக்கும் இதுபோன்று விமானநிலையத்தில் வேலை வேண்டும் என்றால் பணம் அனுப்புங்கள்” என்று ஆசையை தூண்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் அந்த நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை அனுப்பினார். இதையடுத்து, அந்த மர்ம நபர் வேலையில் சேர்வதற்கான போலி அனுமதி விண்ணப்பத்தை அந்த வாலிபருக்கு அனுப்பியுள்ளார்.
இதனை பதிவிறக்கம் செய்து கொண்ட அந்த வாலிபர் பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு இந்த அனுமதி விண்ணப்பத்தை கொடுத்த போது தான் அந்த விண்ணப்பம் போலியானது என்று தெரியவந்தது. அப்போதுதான் அந்த நபர் தன்னை மோசடி செய்துள்ளார் என்பது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து இந்த வாலிபர் தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, பொறுப்பு தலைமை காவலர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.