7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 18 மாத அகவிலைப்படி அரியருக்காக காத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய அப்டேட் உள்ளது. இதுபற்றி நிதி அமைச்சகம் ராஜ்யசபாவில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு கிடைக்காது என மாநிலங்களவையில் அரசு தெரிவித்துள்ளது.
தொகை கிடைக்காது
ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட மூன்று தவணைகளுக்கான அரியர் தொகை கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடு எதுவும் அரசு தரப்பிலிருந்து தற்போது செய்யப்படவில்லை. இந்த அரியர் தொகை கொரோனா பெருந்தொற்று காலத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அரசாங்கம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை முடக்கியது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
மாநிலங்களவை எம்.பி., நரண்-பாய் ஜே. ரத்வா, அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட டி.ஏ-வின் நிலுவைத் தொகையை வழங்குமா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ‘மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சார்பில் 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகை தொடர்பான பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மோசமான நிதி பாதிப்பு காரணமாக, இந்தப் காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகையை விடுவிக்கும் திட்டம் இல்லை.’ என்று தெரிவித்தார்.
ஏமாற்றத்தில் ஊழியர் சங்கம்
அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்கள் சங்கத்துக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் இந்த தொகையை அரசு நிறுத்த முடியாது என்பது அவர்களது வாதமாக உள்ளது. கொரோனா காலத்தில் அகவிலைப்படி அதிகரிக்கப்படாவிட்டாலும் ஊழியர்கள் பணியாற்றினர். இந்தக் காலக்கட்டத்திற்கான அகவிலைப்படியின் அரியர் தொகையை அரசு வழங்காமல் இருந்தால், அரசுக்கு சுமார் ரூ.34,000 கோடி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆண்டில் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்
ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான 18 மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதற்கான எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் பல மாதங்களாக இருந்து வருகிறது. ஊழியர் சங்கங்களும் இதற்கான கோரிக்கையை விடுத்து வருகின்றன. எனினும், இந்தப் பணத்தை வழங்க அரசு தற்போது மறுத்துவிட்டது. தற்போது, ஊழியர்களுக்கு 38 சதவீத டிஏ வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஜனவரி மாதத்தில் அதாவது புத்தாண்டில், மீண்டும் ஒருமுறை டிஏ உயர்த்தப்படும்.