அரசின் காற்றாலை திட்டங்கள் என்ன? மக்களவையில் திமுக கேள்வி

புதுடெல்லி: ‘‘அரசு நிறுவனங்கள் அவற்றின் மின் தேவைக்கு காற்றாலை சக்தியை பயன்படுத்தும் திட்டங்கள் அரசிடம் உள்ளதா?,’’ என்று மக்களவையில் ஒன்றிய அரசுக்கு திமுக கேள்வி எழுப்பியது. மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ’அரசு நிறுவனங்கள் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது மின் தேவைக்காக காற்றாலை ஆற்றலை பயன்படுத்த திட்டங்கள் வைத்துள்ளதா? அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களில் சூரிய மின் சக்திக்கான சோலார் பேனல்கள் நிறுவுவதை விரிவுபடுத்த அரசிடம் திட்டங்கள் உள்ளதா?  கல்வி நிறுவனங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புகள் அமைக்க மானியம் அல்லது வரி விலக்கு அளிக்க அரசு முன்வருமா? அப்படியென்றால் அதன் விவரங்கள் என்ன?  என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்,’ கடற்கரை ஓரங்களில் உள்ள அரசு நிறுவனங்களில் தற்போது காற்றாலை மின் கட்டமைப்பு அமைப்பது பற்றி அமைச்சகத்திடம் குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மேற்கூரை சூரிய திட்டம் பேஸ் இரண்டு மற்றும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது,’’ என தெரிவித்தார்.

* திமுக எம்பி கிரிராஜன் மாநிலங்களவையில், “காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் நாடு முழுவதும் மரணமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஒன்றிய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?’’ என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், `’காற்று மாசு மரணங்கள் குறித்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்,’’ என தெரிவித்தார்.

* மக்களவையில் திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பி சி.என். அண்ணாதுரை பேசும் போது, ‘‘நாட்டில் புற்றுநோய் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 13.5 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 7 லட்சம் நோயாளிகள் இறக்கின்றனர். புற்றுநோயை தடுக்க ஒன்றிய அரசு வலுவான திட்டம் வகுத்து குறைந்த செலவிலும் எளிதாக சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு போதுமான நிதியுதவி அளித்து அதனை உலக தரத்திலான சிகிச்சை மையமாக உருவாக்க வேண்டும்’’ என்றார்.

* மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்,‘‘கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் இறங்குதளம், அதிவிரைவு படகுகள் கொண்ட கடலோர காவல் படை நிலையம் ஒன்றினை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். மேலும் கடல் அரிப்புகளால் கிராமங்கள் கடலுக்குள் அடித்து கொண்டு செல்லப்படுவதை தடுக்க நிரந்தர கடற்சுவர் எழுப்பி மீனவ கிராமங்களை காக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்காக ஒன்றிய அரசு புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’’ என கோரிக்கை விடுத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.