சென்னை தாம்பரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி, தனியார் இ-சேவை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் ஆதார் கார்டு விண்ணப்பிப்பதற்காக வந்த மூதாட்டி ஒருவருக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் காமேஷ் பாலாஜி என்பவர் பெயரில் போலி கையெழுத்து போட்டு போலி முத்திரையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவர் காமேஷ் பாலாஜி, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, தலைமை காவலர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதையடுத்து போலீசார், நேற்று மாலை, தனியார் இ-சேவை மையத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு போலி முத்திரை இருப்பது தெரியவந்தது.
அதன் மூலம் அரசு மருத்துவர் பெயரில் போலி முத்திரை மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அதன் பின்னர், அந்த
இ – சேவை மையத்தின் பெண் நிர்வாகியான சசிகலா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த மையத்தில், பல போலி முத்திரைகளை பயன்படுத்தி, ஏராளமான மோசடிகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பத்தப்பட்டு தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.