ஆன்லைன் ரம்மி: “15 நாள்களில் 5 பேர் பலி… ஸ்டாலின் உடனடியாக ஆளுநரைச் சந்திக்கவேண்டும்!" – அன்புமணி

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமலிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்தித்திருந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாவை கூடிய விரைவில் பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இதுபற்றி அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறிவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 15 நாள்களில் மட்டும் 5 பேர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகியிருக்கின்றனர். இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இது குறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாள்களாகின்றன. ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது. ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.