உதயநிதிக்கு வாழ்த்து! நானும் அரசியலில் தான் இருக்கிறேன் – நடிகர் விஷால்!

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் லத்தி படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வர உள்ளது.  இந்த நிலையில், நடிகர் விஷால், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் லத்தி திரைப்பட குழுவினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, லத்தி பட டிரைலரை திரையிட்டு ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி படத்திற்கான பிரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் லத்தி திரைப்படத்தின் டிரையிலர் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, பாடல் பாடுதல், நடனம் ஆடுதல் உள்ளிட்ட தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் மேடையில் மாணவர்கள் முன்பு தோன்றி அவர்கள் மத்தியில் உரையாற்றினர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது: “லத்தி திரைப்படம் வரும் 22ம் தேதி லத்தி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தி மொழியில் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இதனிடையே ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் ஒரு இரண்டாம் நிலை காவலராக நடித்துள்ளேன். 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன்.  விவாயிகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக தொடர்ந்து உதவி வருகிறேன். எங்கள் குழுவினர் சரியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்கின்றனர். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் எடுக்க வேண்டும். பிரச்சனைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதய்-ஆக இருந்த போதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான். சிறிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் அகும் போது மக்கள் அங்கு செல்வது குறைவாக உள்ளது. சிறிய திரைப்படங்கள்  நஷ்டத்தை சந்திக்கின்றன. இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது.  எனக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ளதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம்  குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை, விரைவில் அறிவிக்கிறேன்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.