வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த மகாத்மா காந்தி சிலையை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் பாதுகாப்பு குழு கவுன்சில் கூட்டத்தில், ‛ஒசாமாவை பாகிஸ்தான் நற்சான்று கொடுத்து கொண்டாடி வருவதாக’ ஜெய்சங்கர் பாக்.,க்கு பதிலடி கொடுத்தார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை, அந்த கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா சபை தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த மார்பளவு மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்-ம் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.

குஜராத்தில் உள்ள பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த ராம் சுதார் என்ற பிரபல சிற்பி தான், இந்த காந்தி சிலையையும் உருவாக்கி உள்ளார். தற்போது ஐ.நா.,வில் திறக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2வது பரிசாகும். ஏற்கெனவே கடந்த 1982ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.,வுக்கு சூா்ய பகவான் சிலையை அப்போதைய பிரதமர் இந்திரா பரிசாக அளித்தார். அது பாலப் பேரரசு கால 11ம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும்.

ஜெய்சங்கர் தாக்கு
அதன்பின்னர் ஐ.நா., பாதுகாப்பு குழு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை கடுமையாக சாடினார். முன்னதாக பாக்., தரப்பில் பேசிய பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், ‛பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு நற்சான்று கொடுத்து கொண்டாடி வருகிறது. அண்டைய நாட்டின் பார்லி., மீது தாக்குதல் நடத்தியதற்கு ஆதரவு அளிப்பது போன்ற செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும்போது பாக்., தன்னை நியாயப்படுத்தி, உபதேசம் செய்யும் தகுதி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement