ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதலமைச்சர்கள் வரலாம் – விமர்சிக்கும் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என்று தெரிய வில்லை. இது அனைவரின் மனதிலும் எழும் கேள்விதான். வருங்காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதலமைச்சர்களை கூட அறிவிக்கலாம். தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் எல்லாம் கட்சிக்கு பல தலைமுறையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் முக்கிய பதவிகள் கிடைக்கிறது என்று மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டார். 

அவர் தெரிவித்ததைபோல் திமுகவில் பலருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்களெல்லாம் அமைச்சர் ஆகிறார்கள். அமமுகவின் தேர்தல் கூட்டணி குறித்து 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் அறிவிக்கப்படும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றால் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்து வைத்தார்களே அவர்களால்தான் முடியும். அதிமுக 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியும், அவரை சேர்ந்த ஒரு குழுவினரும் அதை வட்டார கட்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் சமுதாய கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

முன்னதாக, திமுக எம்.எல்.ஏவும், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை இலாகா அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டது. நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின், விமர்சனங்களை எனது செயலினால் எதிர்கொள்வே என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.