தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை எடுத்த இயக்குநர் பாலா விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுத்த ஆதித்யா வர்மா படம் மூலம் மன உளைச்சலை சந்தித்தார். முழுமையாக எடுத்து முடித்த பிறகு படம் திருப்தி அளிக்காததால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாகவே கருதப்பட்டது. இதனையடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் திடீரென வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக பாலா வெளியிட்ட அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே ‘வணங்கான்” திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்” என குறிப்பிட்டிருந்தார்.
அதனையடுத்து நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யாவும், 2D Entertainment நிறுவனமும் வணங்கானிலிருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணாவுடன் துணை நிற்போம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சூர்யா விலகினாலும் வணங்கான் படம் தொடரும் என பாலா அறிவித்திருந்ததால் சூர்யாவுக்கு பதில் வேறு யார் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. மேலும், வணங்கான் படத்தில் அதர்வா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வணங்கான் படத்தை முடிப்பதற்கு பாலா வேறு ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறாராம். அதாவது படத்தை குறைந்த பட்ஜெட்டில் தானே தயாரிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார் என பேசப்படுகிறது. மேலும், இப்படத்தின் படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்தும் புதுமுக கலைஞர்களை வைத்து வணங்கானை முடிக்க பாலா திட்டமிட்டிருக்கிறாராம்.