டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. கடந்த மார்ச் மாதம் நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுந்திருந்தார். 1967ம் ஆண்டே நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவானது இந்த பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தாலும், பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதை சுட்டிக் காட்டி அவர் கடிதம் எழுதியிருந்தார்.
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்தது. அதன் மீதான விவாதங்கள் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்று விவாதம் நிறைவடைந்த நிலையில் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நாளை இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளையும் பெறுவர்.