திருவண்ணாமலை கோயிலில் நாளையுடன் மகா தீபம் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை மீது கடந்த 6ம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 6ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது மரபு. அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று 9 வது நாளாக மகாதீபம் மலையில் காட்சியளித்தது.

இந்தநிலையில், மலை மீது காட்சி தரும் மகாதீபம் நாளை இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (17ம்தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும் கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். ஜனவரி 6ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.