சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு 6,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,627 கன அடி ஆக இருந்த நிலையில் நேற்று மாலை நீர்வரத்து 6,598 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணை நீர்மட்டம் 104.70 அடியாகவும், நீர் இருப்பு 32.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலையில் அது அதிகரிக்கப்பட்டு பவானி ஆற்றின் ஒன்பது கீழ் மதகுகளில் 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. வெண்ணிறத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது. பவானி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது எனவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.