பாப், ராப் இசைகள் தொடங்கி தாத்தா முத்துவேலன் வரை… உற்சாகமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இசை மன்றங்களில் தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

96வது மார்கழி இசை திருவிழா, சென்னையில் புகழ்பெற்ற சபாக்களில் ஒன்றான மியூசிக் அகாடமியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மியூசிக் அகாடமியின் டி.டி.கே அரங்கத்தில் எம்.எஸ் சுப்புலட்சுமி, பட்டம்மாள் தொடங்கி இன்றைய தலைமுறை புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் வரை நடைபெற்றுள்ளது. மியூசிக் அகாடமியில் இசை அரங்கேற்றம் செய்வதும், அங்கு வழங்கப்படும் சங்கீத கலாமணி விருது பெறுவதும் இசை கலைஞர்களுக்கு கௌரவமாக பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 3 வருடமாக சங்கீத கலாநிதி விருது கொடுக்கப்படாத நிலையில், தற்போது 2020 முதல் 2022 வரை அறிவிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மியூசிக் அகடாமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில், சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருதுகளை நெய்வேலி திரு. சந்தான கோபாலன், திருவாரூர் திரு. பக்தவத்சலம், 1/2 pic.twitter.com/vkNTnbjLAk
— TN DIPR (@TNDIPRNEWS) December 15, 2022
நெய்வேலி சந்தான கோபாலன், திருவாரூர் பக்தவச்சலம், லால்குடி ஜிஜிஆர் கிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து சங்கீத கலாநிதி விருது பெற்றனர். தொடர்ச்சியாக மார்கழி மாதம் முழுவதும் நடக்க உள்ள கச்சேரியில் 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களின் அரங்கேற்றம் மியூசிக் அகாடமியில் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 4 இசை கச்சேரிகள் வீதம் நடைபெறும் மார்கழி இசை விழாவை முதல்வர் தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், மியூசிக் அகாடமியின் நிர்வாகிகள், இசைக் கலைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அதன் பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”1975, 1996ல் நடந்த மார்கழி விழாவில் கருணாநிதி கலந்து கொண்டார். தற்போது நான் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். எந்த அமைப்பாக இருந்தாலும் உருவாக்குவது எளிது,  தொடர்ந்து நடத்துவது கடினம். இன்னும் 4 ஆண்டுகளில் நூற்றாண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிலும் நான் பங்கேற்பேன் என நம்புகிறேன்.
image

இசைக்கு ஒரு வரலாறு உண்டு. மியூசிக் அகாடமிக்கு ஒரு தனி இடம் உண்டு. நான் இங்கு முதல்வராக வரவில்லை; ஒரு இசை ரசிகனாக வந்துள்ளேன். எனது தாத்தா முத்துவேலன் இசை வேந்தராக இருந்தார். அப்பாவுக்கு இசையின் மீது ஆர்வம் உண்டு. அண்ணாவின் மாபெரும் தமிழ் கனவு, தெற்கிலிருந்து சூரியன் போன்ற இந்து வெளியீட்டில் நூல்கள் எனக்கு அதிகமான நபரால் பரிசு அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்து வந்த இசை ஆர்வலர்களை வேடந்தாங்களாக மியூசிக் அகாடமி ஈர்த்து வருகிறது. இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; பண்பாட்டு நிகழ்ச்சி.

மார்கழி என்றாலே உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள், ஆர்வலர்கள் சென்னை நோக்கி வருகிறார்கள். சங்கீத கலாநிதி விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றில் முதலில் பிறந்தது நாடகம் என கலைஞர் சொல்வார். தொல்காப்பியம் காலத்திற்கு முன்பே தமிழ் இசை வடிவம் இருந்தது. தமிழரின் இசை வடிவம் பழமையானது செழுமையானது. சிலப்பதிகாரம் முழுக்க இசை பாடல்கள்; தமிழுக்கும் இசைக்கும் தொடர்பை சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் பக்தி இலக்கிய பாடல்கள் மூலம் அடையலாம்.

எங்கள் விழா மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என கூறுகிறார்கள். இசை மன்றங்களில் தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ராப் இசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும் அது தமிழில் ஒலிக்க வேண்டும். மொழி இருந்தால் தான் கலை இருக்கும். எனவே இசை வளர்ப்பது தமிழ் வளர்ப்பதை போன்றது ஆகும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.