புதுடில்லி,:புதுடில்லியில், பள்ளி மாணவியின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ‘ஆன்லைன்’ வர்த்தக செயலியான, ‘பிளிப்கார்ட்’ வாயிலாக வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்மேற்கு டில்லியின் துவாரகா பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி முகத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். வலியால் துடித்த அந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீசிய முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா, 20, அவருக்கு உதவிய இரு நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால், 19, வீரேந்தர் சிங், 22 கியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான மாணவியும், சச்சின் அரோராவும் கடந்த செப்., வரை நண்பர்களாக இருந்துள்ளனர்.
இதன் பின் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், அந்த மாணவி பிரிந்துள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த சச்சின் அரோரா, அந்த மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார். கடைகளில் ஆசிட் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் 2013ல் தடை விதித்துள்ள நிலையில், குற்றவாளிகள் ஆன்லைன் வர்த்தக செயலியான, பிளிப்கார்ட் வாயிலாக ஆசிட் வாங்கியது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக செயலிகளான, பிளிப்கார்ட், அமேசான் ஆகியவற்றுக்கு புதுடில்லி மகளிர் ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
ஐ.சி.யு.,வில் மாணவி!
ஆசிட் வீச்சுக்கு ஆளான மாணவியின் நிலை குறித்து புதுடில்லியின் சர்ப்தர்ஜங் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கூறியதாவது:
மாணவி சுய நினைவுடன் உள்ளார். அவரது முகத்தில் 8 சதவீதம் ஆசிட் தாக்குதலால் கருகி உள்ளது. கண்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. கண் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தீ காயங்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement