புதுடில்லி: கடந்த 2014ம் ஆண்டிலிருந்து, பள்ளி பயின்று வரும், பெண் குழந்தைகள் படிப்பில் இருந்து இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலே மருத்துவப் படிப்பு பயில, பாஜ., அரசு முயற்சி செய்து வருகிறது.
கடந்த 8 ஆண்டுக்கு முன்பு, 53 ஆயிரம் இடங்களாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 96 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 87 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், முதுகலை மருத்துவப் படிப்பின் இடங்கள் 31 ஆயிரத்தில் இருந்து 63 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை, நடப்பாண்டில் (2022) 648 ஆக அதிகரித்துள்ளன. கோவிட் காலத்தில் கூட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டுயிலிருந்து, பள்ளி பயின்று வரும், பெண் குழந்தைகள் படிப்பில் இருந்து இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. 2.5 லட்சம் பள்ளிகளில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் பாராட்டை பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement