பெரியசாமி, பெரியகருப்பன் உட்பட 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்

சென்னை: தமிழக அமைச்சரவை நேற்று முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

அமைச்சரவையில் 34-வது அமைச்சராகப் பதவியேற்றுள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் வசமிருந்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, கே.ஆர்.பெரிய கருப்பன் கவனித்து வந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவை உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 10-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் உதயநிதி முதல் வரிசையில் அமருவார்.

ஐ.பெரியசாமி கவனித்து வந்த கூட்டுறவுத் துறை கே.ஆர்.பெரியகருப்பனுக்கும், அவர் கவனித்து வந்த ஊரக வளர்ச்சித் துறை ஐ.பெரியசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஐ.பெரியசாமியிடம் கூடுதலாக இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கும், புள்ளியல் துறை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் இருந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.ராமச்சந்திரன் கவனித்து வந்த வனத் துறை மா.மதிவேந்தனுக்கும், அவர் பொறுப்பு வகித்த சுற்றுலாத் துறை கே.ராமச்சந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.