பேச்சோடு நிறுத்திக் கொள்ளாத ஸ்டாலின்: சேகர் பாபுவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகழாமல் இருந்தது. உதயநிதியின் பதவியேற்போடு சேர்த்து பல முக்கிய துறைகளில் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதிலிருந்தே அமைச்சர்களின் செயல்பாடுகள், துறை ரீதியாக முன்னெடுக்கும் திட்டங்கள், அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அவ்வப்போது உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் கேட்டு பெற்றுவந்ததாக கூறப்பட்டது. சிலரது செயல்பாடுகள் குறித்து நேர்மறையாகவும், சிலரது செயல்பாடுகள் குறித்து எதிர்மறையாகவும் ரிப்போர்ட்கள் சென்ற வண்ணம் இருந்ததாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது. ஆனால் ராஜகண்ணப்பன் விவகாரத்தை தவிர்த்து வேறெந்த மாற்றத்தையும் அமைச்சரவையில் ஸ்டாலின் செய்யவில்லை.

உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பை பயன்படுத்தி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் ஸ்டாலின். இதில் சேகர் பாபுவுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் குறித்த பேச்சு கோட்டை வட்டாரத்திலும், திமுக சீனியர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.

2010ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தார் சேகர்பாபு. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அதன் பின்னர் பத்தாண்டு காலம் திமுகவால் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியவில்லை. இந்த காலகட்டத்தில் தனது செயல்பாடுகள் மூலம் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்று வந்தார் சேகர் பாபு.

எனவே 2021இல் திமுக ஆட்சியைப் பிடித்ததும் சேகர் பாபுவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. ஆனால் பசையுள்ள பெரிய துறை கிடைக்கவில்லை. ஆன்மீக நாட்டம் கொண்ட அவருக்கு அறநிலையத் துறை வழங்கப்பட்டது.

தனக்கு கிடைத்த துறையில் குறுகிய காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. அன்னதான திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு முழு வீச்சில் நடைபெற்றன. இதனால் அறநிலையத்துறை தொடர்ந்து செய்திகளில் வலம் வந்தன.

மாநகராட்சி தேர்தலிலும் சேகர் பாபு தனது செல்வாக்கை நிரூபித்தார். மேயராக பதவியேற்ற பிரியா ராஜன் சேகர் பாபுவின் ஆதரவாளர் என்று அப்போதே தகவல் வெளியானது.

‘இவர் சேகர் பாபு அல்ல செயல் பாபு’ என்று ஸ்டாலினே பல முறை புகழ்ந்து பேசினார். பேசுவதோடு நில்லாமல் சேகர் பாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பொறுப்பை வழங்கியுள்ளார். இதனால் சேகர் பாபு செம குஷியாகிவிட்டாராம். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் என்று உடன்பிறப்புகள் இது குறித்து பேசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.