சென்னை: “மின் வாரியத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் தொழிற்சங்கங்களிடம்தான் கேட்டு செயல்பட வேண்டும் என்று நினைப்பது ஏற்புடையது இல்லை” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டிசம்பர் 27-ம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின் வாரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், “மின் வாரியத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் தொழிற்சங்கங்களிடம் கேட்டு செயல்பட வேண்டும் என்று நினைப்பது ஏற்புடையது அல்ல” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “மின் வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை முடியவில்லை என்றால், மின் வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தலாம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போது போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. தொழிலாளர்களுக்கு ஏதாவது கோரிக்கை இருந்தால், அவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், மின் வாரியத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் தொழிற்சங்கங்களிடம் கேட்டு செயல்பட வேண்டும் என்று நினைப்பது ஏற்புடையது இல்லை” என்று அவர் கூறினார்.