இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே `பப்பு’ என்ற சொல்லை மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தங்களுக்குள் ஒருவரையொருவர் அடிக்கடி விமர்சிப்பதற்காகப் பயன்படுத்திவருகின்றன. கடந்த காலங்களில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை அரசியலில் பப்பு என பா.ஜ.க விமர்சித்திருந்தது. திரிணாமுல் காங்கிரஸும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமித் ஷா தான் இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என விமர்சித்திருந்தது. இதுமாதிரியான சூழலில் பப்பு எனும் இந்த விமர்சன சொல், நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

அதாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும் பப்பு என்ற வார்த்தையை உருவாக்கின. திறமையின்மையைக் குறிக்கவும், இழிவுபடுத்தவும் இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் உண்மையான பப்பு யார் என்பதைக் காட்டவிருக்கிறது. என்.எஸ்.ஓ வெளியிட்ட தரவுகளின் படி, நாட்டில் தொழில்துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில் கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு நான்கு சதவிகிதம் சரிந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வருடத்திற்குள் 72 மில்லியன் டாலர் குறைந்திருக்கிறது. இந்த அரசின் கீழ் 2014 முதல் கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 12.5 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கின்றனர். இப்போது யார் பப்பு?” என பா.ஜ.க-வை சாடியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறார். மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமன், “மாண்புமிகு உறுப்பினர் மஹுவா மொய்த்ரா யார் பப்பு, பப்பு எங்கே இருக்கிறார் எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். அதற்கு அவர் தன் வீட்டின் கொல்லைப்புறத்தைப் பார்க்கவேண்டும். அப்போது பப்பு மேற்குவங்கத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பார்.

சாமானிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் இங்கே இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மேற்கு வங்கம் அதன்மேல் அமர்ந்துகொண்டு யாருக்கும் அதனை அளிப்பதில்லை. எனவே பப்புவை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை” எனக் கூறினார். மஹுவா மொய்த்ரா மற்றும் நிர்மலா சீதாராமனின் இந்த பப்பு மோதலைத்தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாகி வருகிறது.