ராணுவ தாக்குதல் பிரிவில் பெண்கள்: ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தல்!

ராணுவத்தில் பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக்கூடாது எனவும், தாக்குதல் பிரிவில் பெண்களை சேர்க்க வேண்டும் எனவும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், “தி செக்ரட்டரி, மினிஸ்ட்ரிஃப் ஆஃப் டிஃபென்ஸ் vs பபிதா புனியா மற்றும் பிறர். [2020] என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அரசாங்கங்கம் முன்வைத்த வாதங்கள் ‘பாலின ஸ்டீரியோடைப்’ என விமர்சித்து, 2022 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ‘பபிதா புனியா’ தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் பபிதா புனியா தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில், இளைய ஆண் அதிகாரிகள் பெண் அதிகாரிகளைப் புறக்கணிக்கும் போக்கையும், பபிதா புனியா வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் நடைமுறைகளையும் உடனடியாக நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ராணுவத்தின் போர் பிரிவுகளை பெண்கள் அணுக முடியாததாக அமைத்திருப்பது நியாயமற்றது என தெரிவித்த ரவிக்குமார் எம்.பி., பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கொள்கையைத் திருத்த வேண்டும். பதவி உயர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பாலினக் கொள்கை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“இந்திய ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையில் உள்ள மிகப் பெரிய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக மட்டுமல்லாமல், பல்வேறு பதவி உயர்வு மற்றும் பல்வேறு பிரிவுகளிலும், ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.” என்றும் ரவிக்குமார் தமது உரையின் போது சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.