ராஷ்மிகா எப்போதுமே கன்னட திரையுலகிற்கு சொந்தமானவர் தான் : நடிகர் தனஞ்செயா

கன்னட திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிரிக் பார்ட்டி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இப்போது காந்தாரா படத்தை இயக்கி நடித்துள்ளாரே அந்த ரிஷப் ஷெட்டி தான் ராஷ்மிகாவை அறிமுகப்படுத்தியவர். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் அவரை தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்த்தியது. கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் அவரை பாலிவுட்டுக்கும் அழைத்துச் சென்றது.

அதே சமயம் கன்னட திரையுலகில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ளாத ராஷ்மிகா, தனது முதல் படத்தில் ஹீரோவாக நடித்த ரக்சித் ஷெட்டியுடன் செய்து கொண்ட திருமண நிச்சயதார்த்தத்தையும் முறித்து திரையுலக பயணத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். அவர் கன்னட படங்களில் நடிக்காததை கூட கன்னட ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

அதே சமயம் சமீபத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்ட காந்தாரா திரைப்படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியதும், அவருடைய முதல் படமான கிரிக் பார்ட்டி படத்தயாரிப்பு நிறுவனத்தை பற்றி குறிப்பிடாததும் கன்னட திரையுலகத்தையும் ரசிகர்களையும் இன்னும் கோபப்படுத்தியது.

மேலும் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய குருவான ரிஷப் ஷெட்டிக்கு காந்தார வெளியான சமயத்தில் கூட அவர் வாழ்த்தோ, பாராட்டோ தெரிவிக்கவில்லையே என்பதும் கூட இந்த கோபத்திற்கு காரணம். இதனால் இனி அவர் கன்னட படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற அளவுக்கு குரல்கள் ஒலிக்க துவங்கின. இந்த நிலையில் கன்னட நடிகர் தனஞ்செயாவிடம் ராஷ்மிகாவின் இந்தப்போக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்திருந்தார் தனஞ்செயா.

ராஷ்மிகா பற்றி அவர் கூறும்போது, “சினிமாவில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு என பெர்சனலான முடிவுகளை எடுக்கும் உரிமை இருக்கிறது. யாரும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதேசமயம் நம் வீட்டில் உள்ள ஒருவர் ஏதாவது ஒரு தவறு செய்து விட்டால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவோமா என்ன..? அந்த வகையில் ராஷ்மிகா எப்போதுமே நம் கன்னட திரையுலகிற்கு சொந்தமானவர் தான். சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் எல்லா விஷயத்தையும் பர்சனலாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.