டெல்லி: வந்தே பாரத் ரயில் கடந்த 6 மாதங்களில் மட்டும் விலங்குகள் மீது மோதி 68 முறை விபத்து ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் – பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்களின் பிரிமியர் ரயிலான வந்தே பாரத் கால்நடைகள் மீது மோதுவது தொடர்பாக திமுக-வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ. ராஜா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அதில்; 502 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகள் தயாரிக்கவும் அரசு அனுமதி வழங்கும். வந்தே பாரத் ரயில்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது.
படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களுக்கான திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் 1ம் தேதி தொடங்கி இப்போது வரை கடந்த 6 மாதத்தில் 68 முறை கால்நடைகள் மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் உயர்தர எஃகு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயிலின் முன்பகுதி வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது. ஒன்றிய அரசிடம் வந்தே பாரத் 2.0 திட்டமும் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.