துணிவா, வாரிசா என்ற பிரச்னைதான் எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய்தான் அஜித்தைவிட பெரிய ஸ்டார் என தில்ராஜு பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ் சினிமாவின் மூத்த விநியோகஸ்தரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டோம். அப்போது பேசிய அவர், ரஜினி, விஜய், அஜித் நம்பர் 1 என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் விக்ரம் படம் ரிலீஸ் ஆனதும் இதுவரை தமிழ் சினிமாவில் ஆகாத வசூலை அந்தப் படம் எடுத்தது. அப்போ கமல்தானே நம்பர் 1. அதற்கு அடுத்ததாக பொன்னியின் செல்வன் வந்தது. அது விக்ரம் படத்தைவிட அதிக வசூல் எடுத்தது. அப்போ யார் நம்பர் 1. விக்ரமா, கார்த்தியா, ஜெயம் ரவியா. சினிமாவைப் பொறுத்தவரை கதைதான் நம்பர் 1.
விஜய்யோ, அஜித்தோ நாங்கள்தான் நம்பர் 1 என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?… தில்ராஜு பேசுவதை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக்கூடாது. விஜய்யை வைத்து படம் எடுப்பதால் விஜய் நம்பர் 1 என்ரு சொல்கிறார். நாளை அஜித்தை வைத்து படம் எடுத்தால் அஜித்தான் நம்பர் 1 என்பார்.
விஜய்தான் நம்பர் 1 என்றால் வாரிசு கதையை மகேஷ் பாபு, ராம்சரணிடம் சொல்வதற்கு முன் விஜய்யிடம்தான் வந்திருக்க வேண்டும். பிறகு இவர் எதை வைத்து விஜய் நம்பர் 1 என்கிறார். விநியோகஸ்தர்களுக்கான காலம் மலையேறிவிட்டது. படத்தை விலைக்கு வாங்குவதால் எந்த பிர்யோஜனமும் இல்லை. ஒரு திரைப்படத்துக்கான ஓடிடி, சேட்டிலைட், ஓவர்சீஸ் உரிமைகள் விற்றுவிட்டாலே தயாரிப்பாளர்களுக்கான பணம் சேவ் ஆகிவிடுகிறது. அதனால் தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை நாமே ரிலீஸ் செய்துவிடலாம் என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள்தான் நேரடியாக திரைப்படங்களை விநியோகம் செய்கிறார்கள். விநியோகஸ்தர்கள் படங்களை வாங்கி வெளியிடுவதில்லை.
வாரிசுக்கும், துணிவுக்கும் நடக்கும் பிரச்னையை யாரும் தூண்டிவிடுவதில்லை. தில்ராஜு ஏதோ ஒரு ஃப்ளோவில் பேசிவிட்டார் பாவம். இப்போது பத்திரிகைகள், யூட்யூப் சேனல்கள் அதிகமாகிவிட்டன. அதனால் தில்ராஜு பேசியது மாபெரும் குற்றம் என ஆக்கப்படுகிறது. நாளை அவரிடம் பேட்டி எடுத்தால், நான் எதார்த்தமாக சொன்னேன். விஜய், அஜித், ரஜினி பெரிய ஹீரோதான் என சொல்வார்.
ரசிகர்களைப் பொறுத்தவரை ட்விட்டரில் அப்படி இப்படி பேசிகொள்வார்கள். ஆனால் சினிமா என்று வரும்போது விஜய் படத்தை அஜித் ரசிகர்களும், அஜித் படத்தை விஜய் ரசிகர்களும் பார்ப்பார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே என்றார்.
அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நீங்கள் நெருக்கமானவர். பாபா ரீ ரிலீஸ் படத்தின் வசூல் நிலவரம் என்னவென கேட்டோம், “ரீ ரிலீஸைப் பொறுத்தவரை பாபா நல்ல வசூலை எடுத்திருக்கிறது” என்று முடித்தார்.