வாஷிங்டன் : அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ என்ற உயரமான பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ௧௬ வயது இந்திய வம்சாவளி சிறுவன் அங்கு 12ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் இச்சிறுவன் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலத்தில் இருந்து சிறுவன் குதிப்பதை பார்த்த, கடலோர காவல் படையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று வரையிலும் உடல் கிடைக்கவில்லை. எதற்காக அவன் தற்கொலை செய்தான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
”சிறுவனையும் சேர்த்து இதுவரையிலும் நான்கு இந்தியர்கள் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்,” என, இங்குள்ள இந்திய சங்கம் ஒன்றின் தலைவர் அஜய் ஜெயின் புட்டோரியா தெரிவித்துள்ளார்.
‘இந்தப் பாலம் 1937ல் கட்டப்பட்டது முதல், இதுவரையிலும் 2,000பேர் இதிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 25 பேர் இதிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர். நகரின் முக்கிய சுற்றுலாத்தலமான இது தற்கொலைக்கான இடமாகியிருப்பது வருத்தமளிக்கிறது’ என ஒரு தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement