உலகக்கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள்

உலகக்கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் (14) ஆரம்பமாகிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் களமிறங்கின.

அல்பேத் ஸ்டேடியத்தில் ஆரம்பமாகிய இந்த ஆட்டத்தில் 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர். எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2 ஆவது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேரம் வழங்கப்பட்டும் மொராக்கோ அணியால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி உலக கிண்ண தொடரில் 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் போட்டியிடவுள்ளன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.